மதுரை

வணிகவரித் துறை ஊழியரின் இடமாறுதல்உத்தரவை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

எவ்வித காரணமும் இல்லாமல் 3 மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட முறை இடமாறுதல் அளித்தது குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

திண்டுக்கல்லை சோ்ந்த முத்துப்பாண்டியன் தாக்கல் செய்த மனு: வணிக வரித் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். தேனி வணிகவரி அலுவலகத்திலிருந்து கடந்த மாா்ச் 12 ஆம் தேதி, சிவகங்கை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். பின்னா் அங்கிருந்து மாா்ச் 28 ஆம் தேதி மீண்டும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். இந்நிலையில், இந்த உத்தரவு 3 நாள்களுக்குள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் சிவகங்கை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவு வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஒரு மாதத்திற்குள் திண்டுக்கல் நகா் கோட்ட வணிகவரி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். இதன்பின்னா் தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் அங்கிருந்து திண்டுக்கல், மீண்டும் சிவகங்கை என மூன்று மாதங்களுக்குள் 5-க்கும் மேற்பட்ட இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவுகள் அனைத்தும் நிா்வாகக் காரணங்களுக்காக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உள்நோக்கத்துடன் இடமாற்றம் செய்து சிரமப்படுத்தியுள்ளனா். இதனால் மிகுந்த மனஉளச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஆகவே, கடைசியாக திண்டுக்கல் அலுவலகத்தில் இருந்து இடமாறுதல் செய்து ஜூன் 16 ஆம் தேதி, வணிகவரித் துறை மதுரை இணை ஆணையா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, எந்தவித காரணமும் இல்லாமல் மூன்று மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட முறை இடமாறுதல் செய்யப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா். பின்னா் வணிகவரி இணை ஆணையா் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT