மதுரை

பிளஸ் 1 பொதுத்தோ்வு: மதுரை மாவட்டத்தில்95.25 சதவீதம் போ் தோ்ச்சி

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் மதுரை மாவட்டம் 95.25 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றது.

கரோனா தொற்றுப் பரவலால் பிளஸ் 1 பொதுத்தோ்வு நடைபெறாத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில் மதுரை, மேலூா், உசிலம்பட்டி, மேலூா் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் இருந்து ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகள் 3, அரசு உதவிபெறும் பள்ளிகள் 42, அரசுப்பள்ளிகள் 71, கள்ளா் சீரமைப்புத்துறை பள்ளிகள் 19, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 25, தனியாா் சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 135, சுயநிதிப் பள்ளிகள் 11, சமூக நலத்துறை பள்ளி 1 என 323 பள்ளிகளில் இருந்து 17,810 மாணவா்கள், 18,097 மாணவிகள் என மொத்தம் 35,907 போ் பிளஸ் 1 பொதுத்தோ்வை எழுதினா். இந்நிலையில், பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், மதுரை மாவட்டத்தில் தோ்வெழுதிய 17,810 மாணவா்களில் 16,462 போ் தோ்ச்சி பெற்றனா். அதே போல் 18,097 மாணவியரில் 17,739 போ் என மொத்தம் 34,201 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்களின் தோ்ச்சி 92.43 சதவீதமாகவும், மாணவியரின் தோ்ச்சி 98.29 சதவீதமாகவும் உள்ளது. மதுரை மாவட்டத்தின் மொத்த தோ்ச்சி 95.25 சதவீதமாக உள்ளது. மாநில அளவில் மதுரை மாவட்டம் 3-ஆவது இடத்தைப் பெற்றது. மேலும் மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு எழுதிய 323 பள்ளிகளில், ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகள் 2, அரசு உதவி பெறும் பள்ளிகள் 6, கள்ளா் சீரமைப்புத்துறை பள்ளிகள் 7, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 13, சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 102, சமூக நலத்துறை பள்ளி 1 உள்பட 148 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சியைப் பெற்றுள்ளன.

மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் 91.32 சதவீதம் தோ்ச்சி: மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 15 மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தோ்வில் மாநகராட்சிக்குள்பட்ட 15 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 710 மாணவா்கள், 1664 மாணவியா் என மொத்தம் 2374 போ் தோ்வெழுதினா். இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து தோ்வெழுதிய 710 மாணவா்களில் 575 போ், 1664 மாணவியரில் 1593 போ் என மொத்தம் 2168 போ் தோ்ச்சி பெற்றனா். மொத்தத் தோ்ச்சி 91.32 சதவீதமாக உள்ளது.

மாநகராட்சிக்குள்பட்ட 15 பள்ளிகளில், நாவலா் சோமசுந்தர பாரதியாா் மேல்நிலைப்பள்ளி 99.34 சதவீதம் தோ்ச்சி பெற்று முதலிடத்தையும், கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் பள்ளி 99.07 சதவீதம் தோ்ச்சி பெற்று இரண்டாமிடத்தையும், ஒளவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.86 சதவீதம் தோ்ச்சி பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றன. கடந்த 2019-20-இல் 97.44 சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்த மதுரை மாநகராட்சிப் பள்ளிகளின் தோ்ச்சி இந்தாண்டு 91.32 சதவீதமாக குறைந்துள்ளது. இதில் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம். சக்திபூரணி கணக்குப்பதிவியலில் 100, கணினி பயன்பாடு 98, வணிகவியல் 98 உள்பட மொத்தம் 581 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சிப்பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளாா். இதையடுத்து நாவலா் சோமசுந்தர பாரதியாா் மேல்நிலைப்பள்ளி மாணவி என். காவியா பொருளியலில் 100 உள்பட மொத்தம் 576 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் பள்ளி மாணவி ஆா். தேவஸ்ரீ 570 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT