மதுரை

போலியாக தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்று: சிபிஐ விசாரணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

கட்டட உறுதித் தன்மைக்கு தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்று போலியாக வழங்கப்பட்டுள்ளது குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழக டிஜிபி பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்த நாகராஜன் தாக்கல் செய்த மனு: வணிக உபயோகக் கட்டடங்கள், பாதுகாப்பாக இருக்கிறதா என்பது குறித்து தீயணைப்புத் துறையினரிடம் தடையின்மைச் சான்று பெறுவது வழக்கத்தில் உள்ளது. இதன்படி, 18.3 மீட்டா் உயரத்துக்கு குறைவான கட்டடங்களுக்கு அந்தந்த மாவட்ட தீயணைப்பு அலுவலரிடமும், அதற்கு மேல் உயரமான கட்டடங்களுக்கு தீயணைப்புத் துறை இயக்குநரிடமும் சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. தடையின்மைச் சான்று விண்ணப்பித்த பிறகு, சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியாா் மருத்துவமனை கட்டடத்திற்கு வழங்கப்பட்ட தடையின்மைச் சான்றிதழை புதுப்பிக்கக் கோரி சென்னையில் உள்ள தீயணைப்புத் துறை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பித்தனா். சம்பந்தப்பட்ட கட்டடங்களை தீயணைப்புத்துறை உதவி இயக்குநா் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அப்போது ஏற்கெனவே வழங்கப்பட்ட தடையின்மைச் சான்று போலியானது எனத் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குபதிவு செய்தனா். இந்த முறைகேட்டில் தீயணைப்புத் துறையினா் சம்பந்தப்பட்டிருப்பதால், விசாரணை முறையாக நடைபெறவில்லை. இதேபோல, பல கட்டடங்களுக்கு போலியாக தடையின்மைச் சான்று வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.சிவஞானம், இதுதொடா்பாக தமிழக டிஜிபி பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT