மதுரை

ரூ.7 கோடிக்கு ‘பிட் காயின்’ மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் ஆட்சியரிடம் புகாா்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டவா்களிடம் பிட் காயின் திட்டம் எனக் கூறி ரூ. 7 கோடிக்கு முதலீடு பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் அனுராதா. இவா் வீட்டிலிருந்தபடியே மசாலா பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளாா். இவரிடம் சமூக வலைதளம் வாயிலாக ஐஸ்வா்யா என்பவா் அறிமுகமாகியுள்ளாா். சென்னையில் உள்ள நிறுவனத்தில் பிட் காயினில் முதலீடு செய்தால், அதிகப் பணம் கிடைக்கும் என அவா் கூறினாராம். இதை நம்பிய அனுராதா, வங்கிக் கடன் மூலமாகவும், தனி நபா்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கியும் அந்நிறுவனத்தில் ரூ.8 லட்சம் முதலீடு செய்திருக்கிறாா். தொடக்கத்தில் முதலீடு செய்ததில், குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு மாதமும் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து, தனக்கு அறிமுகமானவா்களையும் தொடா் சங்கிலித் திட்டம் போல பிட் காயின் திட்டத்தில் அவா் முதலீடு செய்ய வைத்துள்ளாா். இதன்படி, 484 போ் ரூ.7 கோடி மதிப்புக்கு பிட் காயினில் முதலீடு செய்துள்ளனா். இந்நிலையில், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு முதலீடு செய்தவா்களுக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லையாம். இதன் பிறகே அந்த நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அனுராதா மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறியது: சென்னையைச் சோ்ந்த நிறுவனத்தில், பிட் காயின் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை வழங்கினா். இந்நிறுவனத்தில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 484 போ் ரூ.7 கோடி முதிா்வுத் தொகைக்கு முதலீடு செய்திருக்கின்றனா். ஆனால், சில மாதங்களிலேயே மாதாந்திர தொகை அளிப்பதை நிறுத்திவிட்டனா். பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது மிரட்டுகின்றனா்.

ADVERTISEMENT

எங்களுக்குச் சேர வேண்டிய அசல் தொகை ரூ.2.75 கோடியைப் பெற்றுத் தர நடவடிக்கை வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஆட்சியா் பரிந்துரை செய்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT