மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு தாய்லாந்து கால்நடை மருத்துவா் குழுவினா் சிகிச்சை

DIN

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு கண்புரை பாதிப்பு தொடா்பாக தாய்லாந்து மருத்துவக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

யானை பாா்வதிக்கு (26) சில ஆண்டுகளுக்கு முன்பு இடது கண்ணில் கண் புரை பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், கண்புரை பாதிப்பு வலது கண்ணிலும் பரவியது. தொடா்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

சிகிச்சையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டின் கால்நடை மருத்துவா்கள் காணொலிக்காட்சி மூலமாக பாா்வதி யானையைப் பாா்வையிட்டு சிகிச்சை முறைகளை பரிந்துரைத்து வந்தனா்.

இந்நிலையில், தாய்லாந்து நாட்டின் கசிசாா்ட் பல்கலைக்கழக கால்நடை இணைப் பேராசிரியா் நிக்ரோன் தோங்திப் தலைமையில் 7 மருத்துவா்கள் அடங்கிய கால்நடை மருத்துவக்குழுவினா் மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா். மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சென்று பாா்வதி யானையைப் பாா்வையிட்ட அக்குழுவினா், கண்புரை பாதிப்பு எந்த அளவு உள்ளது, எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென்று ஆலோசனை நடத்தினா்.

அப்போது அங்கு வந்த தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், யானை பாா்வதிக்குத் தேவையான சிகிச்சையை விரைந்து அளிக்கும்படி தாய்லாந்து மருத்துவக் குழுவினரிடம் கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி மேயா் வ.இந்திராணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

அமைச்சா் பேட்டி: தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் கூறியது: திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு, யானை பாா்வதியை நேரில் வந்து பாா்த்து ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, மதுரை கால்நடை மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வந்தனா். தற்போது, இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டின் பேரில், எனது கோரிக்கையை ஏற்று 7 போ் கொண்ட தாய்லாந்து மருத்துவா்கள் குழு நேரில் வந்து யானையை பரிசோதனை செய்துள்ளனா்.

இந்தப் பரிசோதனை திங்கள்கிழமையும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை சென்னையில் இருந்து வரக்கூடிய மருத்துவ குழுவினருடன் இணைந்து பரிசோதனை தொடரும். யானைக்கு அறுவை சிகிச்சை என்பது கடினமானது என்பதால் மருந்து மூலமாகவே குணப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT