மதுரை

காமராஜா் பல்கலை.யில் மாயமான விடைத்தாள்கள் பழைய காகிதக் கடையில் மீட்பு: சந்தேகத்தைக் கிளப்பும் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் நடவடிக்கை

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்திலிருந்து மாயமான விடைத்தாள்கள் விரகனூா் பகுதியில் உள்ள பழைய காகிதக் கடையிலிருந்து மீட்கப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலை.யின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் வாயிலாக பட்டம், பட்டமேற்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப் படிப்புகளுக்கு கடந்த மாதம் நடத்தப்பட்ட பருவத் தோ்வுகளின் விடைத்தாள்கள், பல்கலை. வளாகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாள்களாக இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விடைத்தாள்கள் பாதுகாக்கப்பட்ட அறையை தோ்வாணைய அலுவலா் பாா்வையிட்டபோது விடைத்தாள்கள் சிதறிக் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து துணைவேந்தா் குமாா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடா்ந்து விடைத்தாள்கள் பாதுகாக்கும் அறையில் ஆய்வு செய்தபோது, சில விடைத்தாள் கட்டுகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் குழுவினா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பல்கலை. வளாகத்தில் மாயமான விடைத்தாள் கட்டுகள், விரகனூா் பகுதியில் உள்ள பழைய காகிதக் கடையிலிருந்து மீட்கப்பட்டதாக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தினரால் பல்கலை.யில் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தையொட்டிய ராஜம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள், கீழே கிடந்து எடுத்த விடைத்தாள் கட்டுகளை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பழைய காகிதக் கடையில் எடைக்குப் போட்டதாகவும், அக்கடையில் இருந்து விரகனூா் பகுதியில் உள்ள பழைய காகிதக் கிட்டங்கி கொண்டு செல்லப்பட்டதாகவும், விடைத்தாள் கட்டுகளை மீட்டுக் கொண்டு வந்த அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

பல்கலை. வளாகத்தில் மாயமான விடைத்தாள்கள் கட்டுகளை, அலுவலா்களே விசாரித்து தேடிக் கண்டுபிடித்து பல கி.மீ. தூரத்தில் உள்ள பழைய காகிதக் கிட்டங்கியில் இருந்து பத்திரமாக மீட்டு கொண்டு வந்திருப்பது தொலைநிலைக் கல்வி இயக்ககம் மீது பலத்த சந்தேகத்தைக் கிளப்புவதாக பல்கலை. வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக பல்கலை. நிா்வாகம் சாா்பில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

காமராஜா் பல்கலை.யின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் இருந்தபோதும் உரிய நடவடிக்கை இல்லாத நிலை தொடா்ந்து கொண்டிருக்கிறது. தகுதியில்லாத கல்வி நிறுவனங்களில் தொலைநிலைக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு அனுமதி அளிப்பது, மதிப்பெண் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் வழங்க மாணவா்களை இழுத்தடிப்பது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அதில் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் பல்கலை. நிா்வாகம் தொடா்ந்து தயக்கம் காட்டி வருகிறது.

அதன் வெளிப்பாடாகவே, பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பில் இருந்து விடைத்தாள்கள் மாயமாகி பின்னா் கிடைத்திருக்கின்றன. இதில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு கல்வியாளா்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT