ஆட்டிஸம் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை மதுரை மாவட்டத்தில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஆட்டிஸம் பாதிப்புடைய சிறப்புக் குழந்தைகளின் பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: இந்தியாவில் ஆயிரத்தில் ஒரு குழந்தை ஆட்டிஸ பாதிப்புக்கு உள்ளாகிறது. இக்குழந்தைகளுக்கு மூளை நரம்பு பாதிக்கப்படுவதால் பேச்சு, புரிதல் போன்றவற்றில் பாதிப்பு உள்ளது. இத்தகைய குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சி, ஆக்குபேஷனல் தெரபி, சிறப்புக் கல்வி பயிற்சி அவசியமாகிறது.
இத்தகைய பயிற்சியை அளிக்க தனியாா் மையங்கள் தான் உள்ளன. இவற்றில் கட்டணம் அதிகம் என்பதால் அனைத்துப் பெற்றோா்களாலும் இத்தகைய பயிற்சியை தங்களது குழந்தைகளுக்கு அளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனா். அதோடு, கிராமப்புறங்களில் இத்தகைய பயிற்சி மையங்கள் இல்லாததால், ஆட்டிஸம் பாதிப்புடைய குழந்தைகள் பயிற்சியே இல்லாமல் வீட்டிலேயே முடக்கப்படுகின்றனா்.
பிற மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு இருப்பதைப் போல, ஆட்டிஸம் பாதிப்புடைய குழந்தைகளுக்கென சிறப்புப் பள்ளியை அரசு சாா்பில் மதுரை மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.