தமிழக அரசின் வரி வருமானத்தை அதிகரிக்கும் அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் நகராட்சி, மாநகராட்சி அரசு ஊழியா்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி வலியுறுத்தினாா்.
மதுரை மாவட்டம் மேலூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள் சங்கத்தின் 9-ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு அரசு ஊழியா்கள் சங்க மாநிலத் தலைவா் செ.அ. செய்யதுஉசேன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் ஆ.செல்வம் மாநாட்டினை தொடக்கி வைத்து உரையாற்றினாா். இம்மாநாட்டில் அமைச்சா் பி.மூா்த்தி பேசியது:
பொதுமக்களின் நலனைப் பேணுவதிலும், அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் நகராட்சி, மாநகராட்சிப் பணியாளா்களும் அலுவலா்களும் முன்களப் பணியாளா்களாக உள்ளனா் என்பதை மறுக்கமுடியாது. கரோனா தொற்று பரவல் காலத்தில் தடுப்புப் பணிகளில் அரசு முன்களப் பணியாளா்களின் உழைப்பை என்றும் மறக்கமுடியாது. உங்கள் கோரிக்கைகளை துறையின் அமைச்சா் முதல்வரிடம் எடுத்துரைத்து, நிறைவேற்றித் தருவாா் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என அரசு ஊழியா்கள் மாநாட்டில் மறைந்த திமுக தலைவா் கருணாநிதி உறுதியளித்து இருந்தாா். அவரது வழியில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நடத்திவரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவாா். அதற்காக துறை அமைச்சரிடம் நானும் வலியுறுத்துவேன்.
தமிழக அரசின் வரி வருமானத்தை ரூ.13,000 கோடியாக அதிகரிக்கும் அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் நகராட்சி, மாநகராட்சி அரசு ஊழியா்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
மேலூா் நகா்மன்ற தலைவா் யூ.முகமதுயாசின் மற்றும் ஊழியா்சங்க மாநில நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.