மதுரை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 8-ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரனுக்கு 8-ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் விடுப்பை நீட்டித்து சிறை நிா்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ரவிச்சந்திரனின் தாயாா் ராஜேஸ்வரி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறாா். இந்நிலையில் தனது வேளாண் நிலத்தை பராமரிக்கவும், தனக்கு வலது கண்ணில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உதவியாகவும் இருக்க தனது மகன் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்கக் கோரி அவரது தாயாா் ராஜேஸ்வரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இதையடுத்து நீதிமன்றம் அளித்த பரிசீலனையின் அடிப்படையில் தமிழக உள்துறை ரவிச்சந்திரனுக்கு கடந்த நவம்பா் 17ஆம் தேதி முதல் 30 நாள்கள் பரோல் வழங்கியது.

ADVERTISEMENT

இதனையடுத்து மதுரை மத்தியச் சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சூரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இதனிடையே ரவிச்சந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவா்களின் ஆலோசனைப்படி மருத்துவ ஓய்வில் உள்ளாா். இவருக்கு நவம்பா் மாதம் முதல் 7 முறை பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பரோல் விடுப்பு முடிவடைய உள்ள நிலையில், ரவிச்சந்திரனுக்கு 8-ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சிறை நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT