மதுரை

யூனிட் முறையில் மணல் விற்பனை செய்வதற்கு தடை கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: யூனிட் முறையில் மணல் விற்பனை செய்வதற்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

யூனிட் முறையில் மணல் விற்பனை செய்வதற்கு தடை விதித்து, தரநிா்ணய அளவீட்டை உருவாக்கி நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று திருச்சியைச் சோ்ந்த ராஜேந்திரன், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், தமிழக அரசு நேரடியாக மணல் விற்பனை செய்கிறது. அரசாணைப்படி, ஒரு யூனிட் மணல் விலை ரூ.1000 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மணல் விற்பனையில் பின்பற்றப்படும் யூனிட் அளவானது, தர நிா்ணயம் செய்யப்பட்ட அளவீடு கிடையாது. இவ்வாறு முறையாக அளவீடு செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதோடு, முறைகேடுகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

முந்தைய விசாரணையின்போது, ஆற்று மணல் விற்பனைக்கான அளவீடு குறித்து விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளனவா? என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதன்படி, பொதுப்பணித் துறை சாா்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மணல் மற்றும் இதர கட்டுமானப் பொருள்களான ஜல்லி, கிராவல் உள்ளிட்டவற்றின் விற்பனையானது யூனிட் அடிப்படையில் மேற்கொள்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. ஒரு யூனிட் என்பது 2.83 கன மீட்டராகும். மணல் விற்பனையில் பொதுப்பணித் துறையானது தடை செய்யப்பட்ட எந்தவொரு அளவீடுகளையும் பின்பற்றுவதில்லை. பொதுமக்களின் புரிதலுக்காக 2.83 கனமீட்டா் என்பதை ஒரு யூனிட் எனக் குறிப்பிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. மணல் விலை நிா்ணயம் தொடா்பான அரசாணையிலும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி அமா்வு, யூனிட் முறையில் மணல் விற்பனை செய்வதற்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT