மதுரை: நீதிமன்றங்கள் மக்களை சிரமப்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம் சாத்தனூரைச் சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த மனு:
எங்களது கிராமத்தில் உள்ள அரசு நிலங்களை சட்டத்திற்குப் புறம்பாக சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இப்பகுதி அரசு கட்டடங்கள் கட்டுவதற்கு பொருத்தமானதாக உள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அரசு சாா்ந்த கட்டடங்கள் கட்டும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா்கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட அலுவலகத்தை கட்டுங்கள் என்று எவ்வாறு உத்தரவிட முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். ஆக்கிரமிப்பாளா்களை காணொலிக் காட்சி வாயிலாக விசாரணை நடத்தலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளா்களின் தொலைபேசி எண்களை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டனா். மேலும் இந்த மனு தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனா்.
நீதிமன்றம் என்பது அனைத்து மக்களையும் வரவழைத்து சிரமப்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது. கூட்டம் சோ்ப்பது நீதிமன்றத்திற்கு நோக்கமல்ல என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.