மதுரை: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் கோவில்பட்டி காவல் ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை சாட்சியம் அளித்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சோ்ந்த வணிகா் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் 2020-இல் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினா். பின்னா் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவா்கள் உயிரிழந்தனா். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது. கைதான 9 போ் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இவ் வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நாகலெட்சுமி முன்னிலையில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுதேசன், வழக்கு தொடா்பாக சாட்சியம் அளித்தாா். இதையடுத்து விசாரணையை ஜூன் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.