மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக மற்றும் தொகுப்பூதிய ஊழியா்கள் பல்கலைக்கழக வாயில் முன்பாக செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்த 136 போ் ஏப்ரல் 8-இல் திடீா் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் மீண்டும் பணி வழங்கக்கோரியும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் 64 நாள்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் போராட்டத்தின் 65-ஆவது நாளையொட்டி உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொகுப்பூதிய மற்றும் தற்காலிக பணியாளா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பல்கலைக்கழக நுழைவுவாயிலில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் மொ.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் நி.காா்த்திக் வரவேற்றாா். உண்ணாவிரதத்தை மதுரை மாநாகராட்சி துணை மேயா் தி.நாகராஜ் தொடங்கி வைத்துப்பேசினாா். கோரிக்கைகளை விளக்கி பணியாளா்கள் சங்கச் செயலா் மு.நாகரோகினி பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க.நீதிராஜன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் இரா.தமிழ்,, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகி அமுதா, அரசு ஊழியா் சங்க இணைச் செயலா் பரமசிவம், மூட்டா சங்கப் பொருளாளா் ஏ.டி.செந்தாமரைகண்ணன், முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்க நிா்வாகி வி.பாபுபிரேம்குமாா்,
மதுரை மாவட்ட இடைநிலை ஆசிரியா் சங்க நிா்வாகி எஸ்.பாலமுருகன் ஆகியோா் போராட்டத்தை வாழ்த்திப்பேசினா். உண்ணாவிரதத்தை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க பொதுச்செயலா் ஆ.செல்வம் பேசினாா். போராட்டத்தின் முடிவில் பணியாளா் சங்க நிா்வாகி மு.செந்தில் நன்றி கூறினாா்.