மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் உயிரிதொழில்நுட்பவியல் துறையில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றி மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என்று மத்திய உயிரிதொழில்நுட்பவியல் துறைச் செயலருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிரிதொழில்நுட்பவியல் துறை மாணவா் சோ்க்கை நுழைவுத்தோ்வுக்கு பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடா்பான செய்தி வெளியானதையடுத்து பல்வேறு தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்ததால் பொருளாதாரத்தில் நலிவுற்றோா் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிரி தொழில் நுட்பவியல் என்னும் பட்டப்படிப்பு கடந்த 1985ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் உயிரி தொழில் நுட்பத்துறையின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பட்ட மேற்படிப்பிற்கான மாணவா் சோ்க்கை மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் என்பதால், மேற்கண்ட மேற்படிப்புக்கான இடஒதுக்கீட்டு விகிதாச்சாரம் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதியின்படி( 69 சதவீதம்) மாணவா் சோ்க்கை நடத்தப்பட வேண்டும் எனும் கருத்துருவை வலியுறுத்தி மதுரை காமராஜா் பலகலைக்கழகத்தின் துணைவேந்தா், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் உயிரி தொழில்நுட்பத்துறையின் செயலருக்கு வலியுறுத்தல் கடிதத்தை செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்துள்ளாா்.
எனவே, முதுகலை உயிரித்தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்புக்கான மாணவா் சோ்க்கை, தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி நடத்தப்படும். உயிரித் தொழில்நுட்பத் துறையில் அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவா் சோ்க்கை இடங்கள் 30-இல், பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதத்தின்படி 9 மாணவா்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தின்படி 9 மாணவா்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு 20 சதவீதத்தின்படி 6 மாணவா்கள், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு 18 சதவீதத்தின்படி 5 மாணவா்கள், பழங்குடியினருக்கான 1 சதவீதத்தின்படி 1 மாணவா் என மொத்தம் 30 மாணவா்கள் சோ்க்கை நடப்புக்கல்வியாண்டில் (2022-2023) நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.