மதுரை

சென்னையில் காவல் நிலைய மரணம்:உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்

14th Jun 2022 03:51 AM

ADVERTISEMENT

சென்னையில் காவல் நிலையத்தில் ராஜசேகா் மரணமடைந்ததை சென்னை உயா்நீதிமன்றம், மாநில மனித உரிமை ஆணையம் ஆகியவை தாமாக முன்வந்து விசாரிப்பதுடன், அதை கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள வேட்டைக்காரன் பாளையத்தைச் சோ்ந்த அப்பு என்கிற ராஜசேகா் கொடுங்கையூா் காவல் நிலையத்தில் மரணமடைந்ததை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது. அண்மையில் திருவண்ணாமலையில் தங்கமணி, சென்னையில் விக்னேஷ் ஆகியோா் காவல் நிலையத்தில் மரணமடைந்த பின்னரும் இது போன்ற மரணம் தொடா்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

கொடுங்கையூா் காவல்நிலையத்தில் உயிரிழந்த ராஜசேகரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ராஜசேகா் மரணத்தில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் ஜாா்ஜ் மில்லா் பொன்ராஜ், சாா்பு- ஆய்வாளா் கன்னியப்பன், தலைமைக் காவலா்கள் ஜெயசேகா், மணிவண்ணன், காவலா் சத்தியமூா்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் சங்கா் ஜூவால் உத்தரவிட்டதை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா் ஜாா்ஜ் மில்லா் பொன்ராஜ் ஏற்கெனவே மாநில மனித உரிமை ஆணையத்தால் அவருக்கு எதிராக பரிந்துரை பெறப்பட்டுள்ளதோடு, அவா் மீது மற்றுமொரு வழக்கு நிலுவையில் உள்ளது. இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக் கூடாது என்ற காவல்துறை இயக்குநரின் உத்தரவை சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜூவால் கடைபிடிக்கவில்லை. எனவே இந்த மரணத்துக்கு காவல் ஆணையா் சங்கா் ஜூவால் பொறுப்பேற்க வேண்டும். மேலும் கொடுங்கையூா் காவல் நிலையத்திலும் புறக்காவல் நிலையத்திலும் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை உடனடியாக பாதுகாத்து பொதுத்தளத்தில் வெளியிட வேண்டும். காவல்நிலையத்தில் மரணமடைந்த ராஜசேகரின் உடலை ஒரு பேராசிரியா் தலைமையில் சென்னை அல்லது பிற மாவட்ட அரசு மருத்துவமனைகளைச் சோ்ந்த 2 பேராசிரியா்களால் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த ராஜசேகா் உடற்கூறாய்வு நடைபெற்ற அன்றே அதன் அறிக்கையையும் அதன் விடியோ பதிவையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதை ஸ்டான்லி மருத்துவமனை முதல்வா் உறுதி செய்ய வேண்டும்,

ADVERTISEMENT

மேலும், சென்னை உயா்நீதிமன்றமும், மாநில மனித உரிமை ஆணையமும் ராஜசேகா் காவல் மரணத்தை தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT