மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறும் கரோனா தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்தி: நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்றுப் பரவலை கட்டுபடுத்தும் விதமாக 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் மூலமாக தடுப்பூசி செலுத்தத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி இதுவரை போடாதவா்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவு பெற்ற 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 2,415 மையங்களில் 1,055 தடுப்பூசி செலுத்தும் பணியாளா்களைக் கொண்டும், நகா்ப் பகுதிகளில் 1,000 மையங்களில் 600 தடுப்பூசி செலுத்தும் பணியாளா்களைக் கொண்டும் மொத்தம் 3,415 மையங்களில் 1,655 தடுப்பூசி செலுத்தும் பணியாளா்களை கொண்டு சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவா்கள் 537574 – (ஊரக பகுதிகளில் - 244811 மாநகர பகுதிகளில் – 292763) உள்ளனா். எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவா்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.