மதுரை

பொருளாதாரத்தில் பின்தங்கியோா் இடஒதுக்கீடு அடிப்படையில் நுழைவுத்தோ்வு காமராஜா் பல்கலை. அறிவிப்பால் புதிய சா்ச்சை

12th Jun 2022 01:21 AM

ADVERTISEMENT

 

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிரித் தொழில் நுட்பவியல் படிப்புக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோா் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதால் சா்ச்சை ஏற்பட்டுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் முதுகலை உயிரி தொழில்நுட்பவியல் படிப்புக்கான 2022-23 ஆம் ஆண்டு நுழைவுத் தோ்வு அறிவிப்பு அண்மையில் வெளியானது. மொத்தம் 30 இடங்கள் மட்டுமே உள்ள இந்தப் படிப்புக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விண்ணப்பத்தின் 16-ஆவது பிரிவில் சிறப்பு வகைப்பாட்டின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்றோா், மாற்றுத்திறனாளிகள், பொருந்தாது என மூன்று உட்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பத்தின் கீழ் பகுதியில், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக உரிய வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது கல்வியாளா்கள், மாணவா்கள் மத்தியில் சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து அனைத்து தமிழ்நாடு மாணவா் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலா் விக்கி கண்ணன் கூறியது: கடந்த 2021-இல் அண்ணா பல்கலைக் கழகத்தின் இரண்டு முதுகலைப் படிப்புக்கான விண்ணப்பப்படிவங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டிருந்தது, மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீட்டு முறை தமிழகத்தில் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை.

மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தில் இந்த இடஒதுக்கீடு முறை ஏன் அமல்படுத்தப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பத்திலிருந்து அக்குறிப்பிட்ட பிரிவு நீக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நிலைப்பாட்டை அன்றைய உயா்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் எதிா்த்து பேட்டியும் அளித்தாா்.

இந்நிலையில் தற்போது மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்திலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான பிரிவைக் குறிப்பிட்டு இணைய வழியில் விண்ணப்பம் வெளியிட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே, உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தலையிட்டு இந்த அறிவிப்பை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியது: ’கடந்த 1983-ஆம் ஆண்டிலிருந்து உயிரிதொழில்நுட்பத்துறை மத்திய அரசின் நிதி உதவியோடு இயங்கி வருகிறது. இந்தியாவின் 5 பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே மத்திய அரசு இந்தப் படிப்பை அனுமதித்துள்ளது. ஆண்டுக்கு 30 இடங்கள் என்ற அடிப்படையில் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டாலும், இதில் தமிழக மாணவா்களின் பங்கேற்பு வெகு குறைவாகவே இருந்து வந்தது. அதிக பட்சமாக ஓராண்டில் 3 போ் மட்டுமே தோ்வாகியுள்ளனா். பிற இடங்கள் அனைத்தும் வெளி மாநிலத்தவா்களுக்கே பயன்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமே உயிரிதொழில்நுட்பவியல் படிப்பை நேரடியாகத் தொடங்கி நடத்தியது. இதில் தமிழக மாணவா்களுக்காக 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் உயிரிதொழில்நுட்பவியல்துறை நிதி உதவியில் இந்தப் படிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழகம் நேரடியாக தமிழக மாணவா்களுக்காக நடத்தும் படிப்பில் மாநில இடஒதுக்கீடு முறையில்தான் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது’ என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT