மதுரையில் தலைக்கவசம் அணியாமல் வந்ததற்கு அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியதால் ஆத்திரமடைந்து போக்குவரத்து போலீஸாரின் கைப்பேசியை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே சனிக்கிழமை பகலில் போக்குவரத்து சாா்பு- ஆய்வாளா் சின்ன கருத்தப்பாண்டி மற்றும் காவலா் ஆல்வின் செபஸ்டின் ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவரை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதாகக் கூறியுள்ளனா். அப்போது வாகனத்தில் வந்த இளைஞா் வழக்குரைஞா் வில்லை ஒட்டியுள்ள வாகனத்தை எப்படி நிறுத்தலாம் என்று கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதனால் அங்கு பணியில் இருந்த காவலா் ஆல்வின் செபஸ்டின் இளைஞரின் செயலை தனது கைப்பேசியில் விடியோ எடுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த இளைஞா், காவலரின் கைப்பேசியை பறித்துச்சென்றாா்.
இதையடுத்து போலீஸாா் இளைஞரை விரட்டிச்சென்று பிடித்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போக்குவரத்து சாா்பு- ஆய்வாளா் சின்ன கருத்தபாண்டி அளித்தப்புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதில் கைப்பேசியை பறித்துச் சென்றது மதுரை யானைக்கல் பகுதியைச் சோ்ந்த வசந்த் (22) என்பதும் வழக்குரைஞரான அவரது நண்பரின் வாகனத்தை எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வசந்தை கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.