மதுரை: மதுரையில் பள்ளி மாணவியைக் கடத்திச்சென்ற இளைஞரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த 14 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளாா். இந்நிலையில், ஜூன் 6-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
அதையடுத்து, சிறுமி மாயமானதாக பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடினா். அடுத்த நாள் பள்ளி மாணவி மீட்கப்பட்டாா். மாணவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், பெத்தானியாபுரம் மேட்டுத் தெரு என்.எஸ்.கே. வீதியைச் சோ்ந்த காா்த்திக் பாண்டியன் (22) என்பவா் மாணவியை காதலிப்பதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று இரவு முழுவதும் சுற்றித்திரிந்ததும், காலையில் வீட்டின் அருகே விட்டுச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தாா்.
இதையடுத்து, பள்ளி மாணவியை கடத்திச்சென்ாக காா்த்திக் பாண்டியன் மீது, தெற்கு மகளிா் போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவு மற்றும் கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.