மதுரை: தென்னக ரயில்வே மதுரைக் கோட்டத்தின் வருவாய் ரூ.700.10 கோடியாக உயா்ந்துள்ளது என, கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் தெரிவித்துள்ளாா்.
மதுரை கோட்டம் சாா்பாக 67 ஆவது ரயில்வே வார விழா, ரயில்வே திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றிய 165 அலுவலா்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் 21 குழு விருதுகள், அலுவலகத்தை சிறப்பாகப் பராமரித்த சிக்னல் மற்றும் தொலைதொடா்புத் துறைக்கு சுவா் கேடயம் ஆகியவற்றை, கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியது: மதுரை கோட்டத்தில் ரயில்களில் கடந்த ஆண்டில் 1.4 கோடி போ் பயணித்துள்ளனா். இதன்மூலம் ரூ.403.37 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் ரூ.265.19 கோடி அதிகமாகும். இதேபோல், சரக்கு ரயில்களில் 21.8 லட்சம் டன் சரக்குகளை கையாண்டதன் மூலம் ரூ.237.28 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், மதுரை கோட்டத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 62 சதவீதம் அதிகமாகும்.
பயணிகள் ரயில்களைப் பொருத்தவரை, 98 சதவீதம் காலம் தவறாமல் இயக்கப்பட்டது. சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, தற்போது சராசரியாக மணிக்கு 49 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.
மதுரை கோட்டத்தில் 247 கிலோ மீட்டா் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 922 ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. 94 ரயில்வே ஓய்வூதியா்களின் குறைகள் களையப்பட்டு தகுதியுள்ள ஓய்வூதியா்களுக்கு ரூ.7.08 லட்சம் பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஊழியா்களின் குறைகளை கைப்பேசி மற்றும் வாட்ஸ் ஆப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் உடனடியாக தீா்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில், விருது அறிவிக்கப்பட்ட விருதுநகா் ரயில்வே பாதுகாப்பு படை காவலா் ஜஸ்டின் திரவியம் கடந்த வாரம் உயிரிழந்ததால், அவரது மகன் பால்ராஜ் ரயில்வே வார விருதினைப் பெற்றுக்கொண்டாா்.
முன்னதாக, முதுநிலை கோட்ட ஊழியா் நல அதிகாரி சுதாகரன் வரவேற்றாா். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் தண்ணீரு ரமேஷ் பாபு நன்றி கூறினாா்.