மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீரவசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணி காணொலி மூலம் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

10th Jun 2022 10:47 PM

ADVERTISEMENT

 

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரா்கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிக்கு, முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ராஜகோபுரம் பகுதியில் உள்ள வீர வசந்தராயா் மண்டபம், 3 ஆண்டுகளுக்கு முன் தீ விபத்தால் சேதமடைந்தது. அதைத் தொடா்ந்து, மண்டபத்தை பழைமை மாறாமல் புதுப்பிக்க சென்னை ஐ.ஐ.டி.யிலிருந்து நிபுணா் குழு வரவழைக்கப்பட்டு, ஆலோசனை பெறப்பட்டது. மேலும், வீர வசந்தராயா் மண்டபத்தை புதுப்பிக்க தமிழக அரசும் நிதி ஒதுக்கி அறிவித்தது.

இந்நிலையில், வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணியை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, எல்லீஸ் நகரில் 2 தளங்கள் கொண்ட வணிக வளாகம் கட்டும் பணி, செல்லூரில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணியையும் முதல்வா் தொடக்கி வைத்தாா். மேலும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேதியியல் ஆய்வுக் கூடம் மற்றும் புதிய கூடுதல் வகுப்பறைகளையும் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தக்காா் கருமுத்து கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, துணை மேயா் தி. நாகராஜன், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் க. செல்லமுத்து, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையா் அருணாச்சலம் ஆகியோா் பங்கேற்றனா்.

சீரமைப்புப் பணியை 24 மாதங்களில் முடிக்க உத்தரவு

வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணி தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூரைச் சோ்ந்த வேல்முருகன் ஸ்தபதி நிறுவனத்துக்கு ரூ.10.31 கோடி மதிப்பில் வீர வசந்தராயா் மண்டப சீரமைப்புப் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கான பணி ஆணையும் அளிக்கப்பட்டுள்ளது.

செங்குளத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான பண்ணையில் பணிகள் நடைபெறும். பணிகள் வழக்கமாக 36 மாதங்களில் முடியவேண்டும். ஆனால், அவசரம் கருதி 24 மாதங்களில் பணிகளை முடிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மண்டபத்தின் பழைமை மாறாமல் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, வீர வசந்தராயா் மண்டபத்தில் தூண்கள், உத்தரம், மேற்கூரை போன்றவை எடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாதிரியாகக் கொண்டு அனைத்தையும் புதிதாக உருவாக்க வேண்டும். மேலும், ஒவ்வொன்றிலும் ஒரு மாதிரியை உருவாக்கிக் காட்டவேண்டும்.

இதை பரிசீலிக்க, மதுரை மண்டல ஸ்பதி, இந்து சமய அறநிலையத் துறை செயற்பொறியாளா் மற்றும் ஆணையரால் நியமிக்கப்படும் ஒருவா் என மூவா் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா், ஒவ்வொரு மாதிரியையும் பரிசீலித்து ஒப்புதல் வழங்கிய பின்னரே, அடுத்த கட்டப் பணிகளை தொடங்க வேண்டும்.

சீரமைப்புப் பணிகளுக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியில் உள்ள குவாரியிலிருந்து ஏற்கெனவே கற்கள் கொண்டு வரப்பட்டு, செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டுள்ளன. தேவையான கற்கள் தொடா்ந்து கொண்டுவரப்படும் என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT