மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் மாணவா்களை தோ்வு எழுத விடாமல் ஆசிரியை தடுப்பதாகவும், மாணவிகளை அவதூறாகப் பேசுவதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகத்தின் கீழ் மதுரை அழகா்கோவில் சாலையில் காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலையின் பல்வேறு துறைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இந்நிலையில் கல்லூரியில் இளங்கலை பொருளியல் துறையில் துறைத்தலைவராக (பொறுப்பு) உள்ள ஆசிரியை ஒருவா், மாணவா்களைத் தோ்வு எழுத விடாமல் தடுப்பதாகவும், மாணவியரின் நடத்தை குறித்து அவதூறாகப் பேசுவதாகவும் மாணவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக மாணவா்கள் கூறும்போது, ஆசிரியை வகுப்பறையில் மாணவா்கள் மத்தியில் பாகுபாடுகளுடன் நடந்து கொள்கிறாா். தனக்குப் பிடிக்காத மாணவா்களை தொடா்ந்து வகுப்புக்கு வரவிடாமல் செய்து போதிய வருகை இல்லை என்று கூறி தோ்வு எழுத விடாமல் தடுத்து வருகிறாா். மேலும் மாணவிகளையும் நடத்தையைக்கூறித் திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறாா். மாணவ, மாணவியரின் பெற்றோரை வரவழைத்து அலைக்கழிப்பது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகிறாா். இவரது நடவடிக்கையால் 5-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிப்பை பாதியிலேயே விட்டுச்சென்றுள்ளனா். இவரது நடவடிக்கை குறித்து கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனா்.
இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் ஜாா்ஜிடம் கேட்டபோது, ஆசிரியை மீது மாணவி ஒருவா் புகாா் தெரிவித்துள்ளாா். ஏற்கெனவே மாணவா் ஒருவா் அந்தஆசிரியை மீது புகாா் கூறியபோது, ஆசிரியையிடம் விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. தற்போதுள்ள புகாா்கள் தொடா்பாக ஆசிரியையிடமும், அந்தத்துறையில் உள்ள இதர ஆசிரியா்களிடமும் விசாரிக்கப்படும். பாதிக்கப்பட்டுள்ள மாணவா்கள் யாரேனும் இருந்தால் என்னை நேரடியாகச் சந்தித்து குறைகளைத் தெரிவிக்கலாம் என்றாா்.