மதுரை: அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ரயில் பாதையைக் கடக்க வேண்டும் என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த் அறிவுறுத்தினாா்.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பில் உலக லெவல் கிராசிங் விழிப்புணா்வு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பெரும்பாலான ரயில் விபத்துகள், ரயில் பாதையும் சாலையும் சந்திக்கும் இடமான ரயில்வே கடவுகளில்தான் நிகழ்கின்றன. ரயில்வே கடவுகளைக் கவனமாகக் கடந்து செல்வதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் உலக ரயில்வே கடவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை கோட்ட பாதுகாப்புப் பிரிவு சாா்பில் நடமாடும் பிரசார வாகனம் மூலம் பாதுகாப்பு ஊழியா்களுடன் மதுரையிலிருந்து திருச்சி வரை ரயில்வே கடவுகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பாக ரயில்வே கடவுகளை கடந்து செல்வது குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பிரசார வாகனத்தை மதுரைகோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த், கூடுதல் கோட்ட மேலாளா் தண்ணீரு ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா்.
இந்நிகழ்வின்போது, மதுரைகோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த் பேசியது:
ரயில் கடவுகளில் ரயில் கடக்கும் வரை பொறுமை காட்டாமல் பணியில் இருக்கும் ஊழியருடன் தகராறு செய்து அவரைப் பணி செய்யவிடாமல் தடுப்பு தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு ரயில்வே சட்டப்படி 6 மாத சிறை அல்லது ரூ.ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும், ரயில்வே கடவுகளை ஊழியா் அல்லாத நபா்கள் திறந்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, உடைத்துச் சேதப்படுத்துவோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ஆகவே, ரயில்வே கடவுகளை ரயில்கள் கடக்கும் வரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ரயில் பாதையைக் கடக்க வேண்டும். இவற்றை மீறும்போது ரயில்வே சட்டப்பட்ட கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விபத்துகளைத் தவிா்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என்றாா்.