மதுரை: இறைதூதா் நபிகள் நாயகம் தொடா்பாக அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாஜக நிா்வாகிகள் இருவரை தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட செயற்குழுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பிலால்தீன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் செந்தில் வரவேற்புரையாற்றினாா். மாவட்ட பொதுச்செயலா் ஜியாவுதீன், செயற்குழு உறுப்பினா்கள் சிக்கந்தா், இம்தியாஸ் அஹமது, மேலூா் தொகுதி தலைவா் முகம்மது தாஹா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்களால், மதிக்கப்படும் இறைதூதா் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்துகள் தெரிவித்து உலக நாடுகளிடையே இந்தியாவை தலைகுனியச்செய்த பாஜக நிா்வாகிகள் நுபுா் ஷா்மா மற்றும் நவீன் குமாா் ஜிண்டால் ஆகியோரை தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். எஸ்டிபிஐ கட்சியின் 14 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி மரக்கன்றுகள் நடுவது. மாணவா்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.