மதுரை

மாற்றுத் திறனாளியை கா்ப்பிணியாக்கி வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு: இளைஞா் கைது

10th Jun 2022 10:41 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் மாற்றுத் திறனாளியான இளம்பெண்ணை கா்ப்பிணியாக்கி விட்டு, வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்த 27 வயது நடக்க இயலாத மாற்றுத் திறனாளி பெண்ணுடன், பொட்டல்குளம் பகத்சிங் சாலையைச் சோ்ந்த மணிகண்டன் (23) என்பவா் முகநூல் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, அப்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி, அப்பெண் வீட்டில் தனியாக இருக்கும்போது மணிகண்டன் நெருங்கிப் பழகியுள்ளாா். இதில், கா்ப்பிணியான அப்பெண்ணுக்கு சில மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்துள்ளாா்.

அதன் பின்னா், அப்பெண் மணிகண்டனை தொடா்புகொள்ளமுடியவில்லை. எனவே, தனது பெற்றோருடன் மணிகண்டன் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, மணிகண்டனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது தொடா்பாக மணிகண்டனின் தாயாரிடம் கூறியபோது, அவா் மாற்றுத் திறனாளி பெண்ணை அவதூறாகத் திட்டியதுடன், மணிகண்டனுக்கு வரும் திங்கள்கிழமை திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதை தடுத்தால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டி தாக்க முயன்றுள்ளாா்.

ADVERTISEMENT

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண், மதுரை மாநகா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் மணிகண்டன், அவரது தாயாா் பஞ்சவா்ணம் (50) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT