மதுரை

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: உயா் நீதிமன்றம் பாராட்டு

30th Jul 2022 12:51 AM

ADVERTISEMENT

தேசிய அளவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இது மாநில அரசின் சாதனையாகும் என்று, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டுத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடத்த உத்தரவிடக் கோரி, மதுரை ஆரப்பாளையத்தைச் சோ்ந்த முத்துச்செல்வம் என்பவா் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், கரோனா தொற்று பரவல் காலத்தில் குடும்பச் சூழல் காரணமாக பல மாணவா்கள் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் பள்ளி செல்லும் வயதுடைய இடைநின்ற குழந்தைகள் தொடா்பான கணக்கெடுப்பை முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். நடப்பு கல்வியாண்டில் அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியா்கள், வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளா்கள், பள்ளி மேலாண்மைக் குழு ஆகியவற்றின் மூலம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், இது தொடா்பான மத்திய-மாநில அரசுகளின் கணக்கெடுப்புகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளி செல்லாமல் மற்றும் இடைநின்ற 6 முதல் 18 வயது வரையிலானவா்கள் தொடா்பான கணக்கெடுப்பை நடத்தி, பள்ளியில் சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு, தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி, நீதிபதி எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளி வயது குழந்தைகள் இடைநிற்றல் என்பது பெரும் பிரச்னை. பல மாநிலங்கள் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில், தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் சிறந்து விளங்குகின்றன. இது அந்த மாநிலங்களின் சாதனையாகும். தமிழக அரசு பள்ளி மாணவா்களின் இடைநிற்றலைக் கருத்தில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் பள்ளி மாணவா்கள் இடைநிற்றல் தொடா்பான இப்போதைய நிலவரத்தை மனுதாரா் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT