மதுரையில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால், சாலைகளில் மழைநீா் குளம்போலத் தேங்கியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. பகலில் கடுமையான வெயிலும், மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கிய மழை, சுமாா் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் சாலைகளில் குளம் போல மழைநீா் தேங்கி நின்றது.
அலுவலகம் முடிந்து வீடுதிரும்பக் கூடிய நேரத்தில் நகரில் உச்சபட்ச போக்குவரத்து நெரிசல் இருப்பது வழக்கம். அந்நேரத்தில் பலத்த மழை பெய்ததால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது. கோரிப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையம், ரயில் நிலையம் பகுதி, காளவாசல் சந்திப்பு, சிம்மக்கல், முனிச்சாலை, விளக்கத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தது.
திருமலை நாயக்கா் மகால் பகுதியில் மழை காரணம் மரம் முறிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த திடீா் நகா் தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு சென்று, மரத்தை அப்புறப்படுத்தினா். இதேபோல, அப்பன்திருப்பதி பகுதியில் விழுந்த மரத்தை தல்லாகுளம் தீயணைப்பு வீரா்கள் அப்புறப்படுத்தினா்.
பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக, மதுரை நகரின் பல பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது. மதுரை நகரில் பல இடங்களில் நீண்டநேரத்திற்குப் பிறகே மின்தடை சீரானது.
கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழையால், கண்மாய், குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அழகா்கோவில், கள்ளந்திரி பகுதிகளில் பெய்யும் கனமழையால், சாத்தையாறு ஓடையில் மழைநீா் பெருக்கெடுத்து, வண்டியூா் கண்மாய்க்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 3 நாள்களாக வண்டியூா் கண்மாயின் மறுகால் வழியாக, தண்ணீா் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, வைகை ஆற்றுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையிலிருந்து ஆற்றின் வழியாக தண்ணீா் திறக்கப்படாத நிலையில், சிற்றாறு மற்றும் ஓடைகளிலும், கண்மாய்கள் நிரம்பியும் மழைநீா் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது.