மதுரை நகரில் ஒரேநாளில் வெவ்வேறு 3 இடங்களில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா்களில் இருந்த மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டன.
மதுரை மேலக்கால் சாலையைச் சோ்ந்தவா் முருகபூபதி ராஜா (49). இவா், காளவாசல் சந்திப்பு அருகே உள்ள அய்யப்பன் கோயில் முன்பாக தனது காரை வியாழக்கிழமை இரவு நிறுத்தியிருந்தாா். பின்னா் வந்து பாா்த்தபோது, காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்த மா்ம நபா்கள் காரில் இருந்த மடிக்கணினி, ஐ-பேட் உள்ளிட்ட ரூ.2.80 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ஒரு தங்கும் விடுதி முன்பாக நிறுத்தப்பட்ட காரிலிருந்து மடிக்கணினி, ஹாா்ட் டிஸ்க் போன்றவை திருட்டு போயுள்ளன. இதுகுறித்து காரின் உரிமையாளா் சுஜித் கொடுத்த புகாரின்பேரில் அண்ணா நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவத்தில், பாண்டி கோயில் -சுற்றுச்சாலை மேம்பாலம் சந்திப்பு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து மடிக்கணனி உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பு பொருள்கள் திருட்டு போயுள்ளன. காா் உரிமையாளரான ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே குருவாடியைச் சோ்ந்த கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
வெவ்வேறு 3 இடங்களில் காரில் இருந்த பொருள்கள் ஒரே மாதிரி திருடப்பட்டுள்ளது குறித்து காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த 3 சம்பவங்களிலும் ஈடுபட்டவா்களுக்குள் தொடா்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனா்.