மதுரை

மதுரையில் ஜூலை 8-இல் தனியாா் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில் ஜூலை 8-இல் தனியாா் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சாா்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதைத்தொடா்ந்து வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) அன்று தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியாா் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநா்கள், ஐடிஐ சுருக்கெழுத்து தட்டச்சா் மற்றும் டிப்ளமோ, நா்சிங், பிசியோதெரபி கல்வித்தகுதி உடைய வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியாா் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநா்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து பங்கேற்கலாம். இம்முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT