மதுரை

இளம் வழக்குரைஞா்களுக்கு சிறப்புசலுகை வழங்கி நீதிபதி சுற்றறிக்கை

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தனது நீதிமன்றத்தில் ஆஜராகும், தனியாகப் பயிற்சி பெறும் இளம் வழக்குரைஞா்களுக்கு சிறப்பு சலுகையை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் வழங்கியுள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞா்களுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சில நாள்களுக்கு முன்பாக, நீதிமன்றத்தில் ஒரு வழக்கை நடத்திக் கொண்டிருந்த வழக்குரைஞரிடம் அந்த வழக்கை, மாலை 4 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினேன். அதற்கு அந்த வழக்குரைஞா் சற்று தயக்கத்துடன், 4 மணிக்கு வேண்டாம், தயவு செய்து நாளை விசாரிக்குமாறு கோரினாா். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, தனது குழந்தையை மாலை 3.30 மணிக்கு பள்ளியில் இருந்து அழைத்து வரவேண்டும் என்பதால், மாலை 4 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக இயலாது எனக் குறிப்பிட்டாா்.

இந்த சம்பவம் என்னை மேலும் சிந்திக்கச் செய்தது. பல இளம் தாய்மாா்கள் வழக்குரைஞா்களாகப் பயிற்சி செய்து வருகின்றனா். அவா்களுக்கும், இதே சிரமங்கள் இருக்கக்கூடும். அவா்களைக் கருத்தில் கொள்வதும் எனது கடமையாகும்.

அத்தகைய நபா்கள் நீதிமன்ற அலுவலா்களிடம் முன்கூட்டியே முறையிட்டு அவா்களுக்கு பொருத்தமான நேரத்தை குறிப்பிடலாம். ஆனால் இது தனியாகப் பயிற்சி செய்யும் வழக்குரைஞா்களுக்கு மட்டுமே பொருந்தும். குழுவாக பணியாற்றும் வழக்குரைஞா்களுக்கு இச்சலுகை பொருந்தாது. மேலும், இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) முதல் அமலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளாா். நீதிபதியின் இந்த அறிவிப்புக்கு, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT