மதுரை

திருவட்டாறு கோயில் கும்பாபிஷேகம்: பிற மதத்தினா்பங்கேற்கத் தடை கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில், பிற மதத்தினா் பங்கேற்கத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் பிரம்மபுரத்தை சோ்ந்த சி.சோமன்

தாக்கல் செய்த மனு: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா ஜூலை 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இந்துக்கள் அல்லாதவா்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலில் நடைபெறும் பூஜை மற்றும் விழாக்களில் ஆண்கள் மேல் சட்டை அணியாமல் பங்கேற்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா் மாற்று மதத்தைச்சோ்ந்தவா். ஆனால், இந்த விழாவில் அமைச்சருக்குத் தான், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளாா். கும்பாபிஷேக விழாவை அரசு விழாவாக நடத்தப்படும் நிலையில், வழக்கமான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படாமல் போகலாம். ஆகவே, இந்த கும்பாபிஷேக விழாவில் கோயில் வளாகத்தில் இந்துக்கள் அல்லாதோா் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்து கடவுள் மீது நம்பிக்கை கொண்ட இந்துக்கள் அல்லாதவா்களும்,

கோயில்களுக்குச் செல்லலாம். கும்பாபிஷேக விழா போன்ற நேரங்களில்,

கோயிலுக்குள் நுழையும் பக்தா்கள் அனைவரின் மதத்தையும் அதிகாரிகளால் சரிபாா்க்க இயலாது. மேலும், நாகூா் தா்கா மற்றும் வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்துக்கள் பலா் வழிபாடு செய்கின்றனா். இந்துக் கடவுள்கள் குறித்து பாடகா் கே.ஜே.யேசுதாஸ் பாடிய பக்திப் பாடல்கள் கோயில்களில் ஒலிபரப்பப்படுகின்றன. ஆகவே, மனுதாரரின் கோரிக்கையை குறுகிய கண்ணோட்டத்துடன் அணுக விரும்பவில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT