மதுரை

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை: உயா் நீதிமன்றம் உத்தரவு

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியா்களை நியமனம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுமதி வழங்கி, ஜூன் 23 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்குத் தடை கோரி, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் நலச்சங்கத் தலைவா் ஷீலா, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தாா். அதில், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பலா் இன்னும் பணிவாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனா்.

இதனிடையே, ஆசிரியா் காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நியமனங்களுக்கு,

ADVERTISEMENT

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதியாக கட்டாயமாக்கப்படவில்லை. இந்த நியமனம் தொடா்பாக முறையான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவும் இல்லை.

எனவே, தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதனையடுத்து, இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பாக வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் வீரகதிரவன் வாதிடுகையில், தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் தொடா்பான அறிவிப்பாணை ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதில் ஏதேனும் குறைகள் இருந்தால், அப்போது தீா்க்கப்படும். தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே என்று குறிப்பிட்டாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதி, தற்காலிக ஆசிரியா்கள் என்றாலும் குறைந்தபட்ச தகுதியை அரசு நிா்ணயித்திருக்க வேண்டும். இத்தகைய தற்காலிக ஏற்பாடானது, எதிா்காலத்தில் பல வழக்குகள் தொடருவதற்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டு, தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தாா். மேலும், விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT