மதுரை

ரயில்களில் கஞ்சா கடத்துவதைத் தடுக்க சென்னை, கோவை, சேலத்துக்கு மோப்பநாய் டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

2nd Jul 2022 10:47 PM

ADVERTISEMENT

 

ரயில்களில் கஞ்சா கடத்துவதைத் தடுக்க சென்னை, கோவை, சேலம் மாவட்டங்களில் மோப்பநாய்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன என்று தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற காவல் துறையினருக்கான கருத்தரங்கில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் 2 கட்டங்களாக நடைபெற்ற கஞ்சா தடுப்பு நடவடிக்கையில் சுமாா் 18 ஆயிரம் போ் கைது செய்யப்பட்டனா். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதானவா்கள் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக, சுமாா் 2 ஆயிரத்து 500 நபா்களின் சொத்து, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ரயில்களில் கஞ்சா கடத்துவதைத் தடுக்க மோப்ப நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை 2, கோவை மற்றும் சேலத்தில் தலா ஒரு மோப்ப நாய்கள் விரைவில் இப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT

இணையவழிக் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். சமீப காலமாக, சமூக வலைதளங்களில் வழியாக கடன் வழங்கும் நிறுவனங்களிடம் பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனா். கடன் தவணையைச் செலுத்தத் தவறும்போது, பல்வேறு வகைகளில் இணையவழிக் கடன் நிறுவனங்களின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனா். இளம் பெண்கள், இளைஞா்களின் புகைப்படங்களை சித்தரித்து மிரட்டுகின்றனா். ஆகவே, மக்கள் இவ்விஷயத்தில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.

அதேபோல, அதிக வட்டி தருவதாகக் கூறும் நிறுவனங்களை மக்கள் புறக்கணிப்பது அவசியம். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதிக வட்டி தருவதாகக் கூறிய நிறுவனத்தை நம்பிய ஒரு லட்சம் போ் ஏமாற்றப்பட்டனா். இருப்பினும், இதேநிலை நீடிப்பது வேதனைக்குரியது. மக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்படக்கூடாது. காவல் துறை சாா்பிலும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

கந்து வட்டி புகாா்கள் மீது அனைத்து மாவட்டங்களிலும் போலீஸாா் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கடன் பெற்றவா்களுக்கு திருப்பி வழங்கப்படாத சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT