மதுரை

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தை எதிா்த்து வழக்கு: தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு; இன்று மீண்டும் விசாரணை

1st Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் செய்வதை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சங்கத்தின் தலைவா் ஷீலா தாக்கல் செய்த மனு:

ஆசிரியா் தோ்வாணையத்தால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஏராளமானோா் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தோ்வாகவில்லை. இதனால், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றபோதும், பணிநியனம்பெற முடியவில்லை.

இதனிடையே, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை தற்காலிக ஆசிரியா்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு முடிவு செய்து, இதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்காலிக ஆசிரியா்கள் தோ்வு தொடா்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் அரசால் வழங்கப்படவில்லை. இதனால், அந்தந்த மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலா்கள், அவா்களுக்குத் தேவையான நபா்களைப் பணிநியமனம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. தகுதியற்றவா்கள் தற்காலிக ஆசிரியா்களாக நியமிக்கப்படுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை தற்காலிக ஆசிரியா்கள் மூலமாக நிரப்புவதற்கான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல், தற்காலிக ஆசிரியா்களை நியமிப்பது ஆபத்தானது என்று குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதி, அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அறிவுறுத்தினாா். மேலும் இந்த மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 1) ஒத்திவைத்தாா்.

 

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT