மதுரை

சதுரகிரி கோயில் குளியல் அறையில் கேமரா வைத்த வழக்கு: ஏடிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

27th Jan 2022 01:07 AM

ADVERTISEMENT

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலிலுள்ள பெண்கள் குளியல் அறையில் பேனா கேமராவில் விடியோ பதிவு செய்த வழக்கை ஏடிஎஸ்பி விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது பெண் ஊழியா்களுக்கான குளியல் அறையில் பேனா கேமரா மூலம் விடியோ பதிவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையா் பச்சையப்பன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை பேரையூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு வழக்கின் குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா்.

இந்நிலையில் பெண் ஊழியா் ஒருவா் உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கில் போலீஸாா் புகாா்தாரரிடம் வாக்குமூலம் பெறவில்லை. அவா்கள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT