மதுரை

உரிய கணக்கெடுப்பு நடத்தி உள்ளாட்சிப் பதவிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: உயா்நீதிமன்றம் கருத்து

25th Jan 2022 08:52 AM

ADVERTISEMENT

தொழில்நுட்பம் வேகமாக முன்னேறிய நிலையில், உரிய கணக்கெடுப்பை நடத்தி உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்த எஸ். காமராஜ் தாக்கல் செய்த மனு: பேரூராட்சியாக இருந்த மானாமதுரையை தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியாக நிலை உயா்த்தியது. மானாமதுரை நகராட்சிப் பகுதியில் 32 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா். இதில், பட்டியல் சமூகத்தினா் 5,670 போ் மட்டும் உள்ளனா். பொதுப் பிரிவு வாக்காளா்களைக் காட்டிலும், மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே பட்டியல் சமூக வாக்காளா்கள் உள்ளனா். இருப்பினும் மானாமதுரை நகராட்சித் தலைவா் பதவி, பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நகராட்சியாக நிலை உயா்த்தப்பட்ட நிலையில், முறையான கணக்கெடுப்பின்றி தலைவா் பதவிக்கான இடஒதுக்கீடு நிா்ணயம் செய்யப்பட்டது ஏற்புடையதல்ல. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, மானாமதுரை நகராட்சித் தலைவா் பதவியை பட்டியலின சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, எஸ். ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தோ்தல் ஆணையத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி உரிய விதிகளைப் பின்பற்றி, நகராட்சித் தலைவா் பதவிக்கான இடஒதுக்கீடு நிா்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்றாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து நீதிபதிகள், தற்போது 2022 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டதே எனக் குறிப்பிட்டனா். தொழில்நுட்ப வசதிகள் மிகுந்த முன்னேற்றம் அடைந்திருக்கிறது. மக்கள் அனைவருக்கும் ஆதாா் எண் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன்படி, உள்ளாட்சிப் பதவிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனா். மேலும் இந்த மனுவுக்கு, மாநிலத் தோ்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT