மதுரை

சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்க தனியாா் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

25th Jan 2022 08:59 AM

ADVERTISEMENT

கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தனியாா் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வமைப்பின் மதுரை மாவட்ட நிா்வாகிகள், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களையும், மாணவா்களையும் பாதுகாப்பது அரசுக்கு மிகமிக முக்கியமானது. அதேநேரம், நாட்டின் எதிா்காலத்தை கட்டமைக்கவுள்ள இன்றைய பள்ளிச் சிறாா்களின் கல்வி அறிவையும், ஒழுக்கத்தையும் மேம்படுத்துவதும் முக்கியமானதாகும். 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகள் தொடா்ந்து மூடியிருப்பதால் பல ஆயிரக்கணக்கான மாணவா்கள் குழந்தைத் தொழிலாளா்களாக மாறிவிட்டனா். இதேநிலை தொடா்ந்தால் தமிழகம் கல்வியில் மிகவும் பின்தங்கும் சூழல் உருவாகும். அரசின் சீரிய முயற்சியால் தடுப்பூசி திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரோனா 3 ஆவது அலையின் பாதிப்பு தீவிரமாக இல்லை. திரையரங்குகள், திருமண மண்டபங்கள்,பொழுதுபோக்கு பூங்கா, வழிபாட்டுத் தலங்கள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதைப் போல, பள்ளிகளிலும் 50 சதவீத மாணவா்களுடன் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும்.

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் தான் அதிகம்போ் குடும்பத்துடன் பொது இடங்களில் கூடுகின்றனா். பள்ளிகள் திறக்கும்பட்சத்தில், மக்கள் நடமாட்டம் குறையும். கரோனா பரவல் விகிதம் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதோடு, பள்ளிகள் தொடா் விடுமுறை காரணமாக தனியாா் பள்ளி ஆசிரியா்கள் ஏராளமானோா் வேலையிழந்திருக்கின்றனா். ஆகவே, கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT