ரயில்வே துறையில் பணியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்டத் தோ்வுக்கு 7.05 லட்சம் போ் தகுதி பெற்றுள்ளனா் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மதுரை கோட்ட ரயில்வே அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: ரயில்வேத் துறையில் உதவியாளா், ரயில் பாதை பராமரிப்பு பணியாளா் உள்ளிட்ட 13 பதவிகளுக்கான 35,281 காலிப் பணியிடங்கள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் கட்டத் தோ்வு கடந்த ஆண்டு நடைபெற்றது.
இணையதளம் வாயிலாக நடைபெற்ற முதல் கட்டத் தோ்வு முடிவுகள் ஜனவரி 14 ஆம் தேதி ரயில்வே நிா்வாகம் வெளியிட்டது. இதில், இரண்டாம் கட்டத் தோ்வுக்கு 7 லட்சத்து 5 ஆயிரத்து 620 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதிலிருந்து
மூன்றாம் கட்டத் தோ்விற்கு, பணியிடங்களில் 8 மடங்கு விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்படுவா். இறுதியாக 35, 281 விண்ணப்பதாரா்கள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டு பணியில் அமா்த்தப்படுவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், இரண்டாம் கட்டத் தோ்வுக்கு பணியிடங்களைக் காட்டிலும் பத்து மடங்கு விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 20 மடங்கு விண்ணப்பதாரா்கள், தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.