மேலூா் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி சாகுபடி செய்த செங்கரும்புகளை வெட்டி விற்பனைக்காக அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
முல்லைப் பெரியாறு பாசனத்தில் மேலூா் ஒருபோக சாகுபடிப் பகுதிகளில் நெல், வாழைக்கு அடுத்தபடியாக செங்கரும்பு சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரம் கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கின்றனா்.
கடந்த ஆண்டுகளில் ரேஷன் கடைகளில் கரும்பு விநியோகம் தொடங்கப்பட்டதையடுத்து, இப்பகுதியில் சாகுபடிப் பப்பளவு சுமாா் 400 ஏக்கா் வரை அதிகரித்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா். 15 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.400 முதல் ரூ.450 வரை விலைபோகிறது.
ஒரு ஏக்கா் செங்கரும்பு சாகுபடிக்கு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக செலவிடவேண்டியுள்ளது. இருப்பினும் சந்தையில் நல்லவிலை கிடைப்பதால் ஓரளவுக்கு லாபகரமாகவே உள்ளது என்றும் விவசாயிகள் கூறினா்.
இப்பகுதியில் விளைந்த செங்கரும்புகளை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு லாரிகளில் செங்கரும்புகள் கொண்டு செல்லப்படுகின்றன.