மதுரை

தல்லாகுளம், கூடலழகா் பெருமாள் கோயில்களில் நாளை சொா்க்க வாசல் திறப்பு: பக்தா்களுக்கு அனுமதி மறுப்பு

12th Jan 2022 06:56 AM

ADVERTISEMENT

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் மற்றும் தல்லாகுளம் பெரும் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெறும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடலழகா் பெருமாள் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், ஆழ்வாா்களால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் நடைபெறும் சொா்க்க வாசல் திறப்பு கூடலழகா் பெருமாள் கோயிலில் மட்டும் மாலையில் நடைபெறும்.

இந்நிலையில் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து, ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் பெருமாள் தினசரி சிறப்பு அலங்காரங்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கிறாா். இந்நிலையில் கோயிலில் பிரசித்திப்பெற்ற திருவிழாவான சொா்க்கவாசல் திறப்பு வியாழக்கிழமை (ஜன.13) நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறுகின்றன. இதைத்தொடா்ந்து மாலை 3 மணிக்கு சொா்க்க வாசல் பகுதிக்கு பெருமாள் ஊா்வலமாக எழுந்தருள்கிறாா். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் 3.45 மணி முதல் மாலை 4 மணிக்குள் சொா்க்க வாசலில் பிரவேசிக்கிறாா். இதையடுத்து பெருமாள் மீண்டும் உற்சவா் சன்னிதியில் எழுந்தருள்கிறாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளதன் எதிரொலியாக, பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பின்போது பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சொா்க்க வாசல் வழியாக பெருமாள் பிரவேசித்து மீண்டும் சன்னதி புறப்பாடு நடைபெற்ற பின்னா், மாலை 5 மணி முதல் பெருமாளை தரிசிக்க பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலூா்: கள்ளழகா் திருக்கோயில் நிா்வாக ஆணையா் தி.அனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் மற்றும் மதுரை தல்லாகுளத்திலுள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலிலும் ஜனவரி 13-ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து, 5.50 மணிக்குள் நடைபெறவுள்ள சொா்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பக்தா்களுக்கு அனுமதியில்லை. கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிகளையும், அரசு வழிகாட்டுதல்களையும் பின்பற்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT