இக்னோ பல்கலைக்கழக மாணவா்களுக்காக ஸ்வயம்பிரபா தொலைக்காட்சி கல்விச்சேவை தமிழில் தொடங்கப்பட்டுள்ளது.
இக்னோ பல்கலைக்கழக மதுரை மண்டல இயக்குநா் எம்.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி: இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப்பல்கலைக்கழகம்(இக்னோ) மதுரை மண்டல மையம் ஸ்வயம்பிரபா என்றழைக்கப்படும் கல்விசேவைக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பில் தமிழ் வழியாக பாடங்களை கற்பிக்கும் பொருட்டு ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதில் ஜனவரி 6 முதல் நாடு முழுவதும் 13 பிராந்திய மொழிகளில் இக்னோ மாணவா்களுக்காக ஸ்வயம் பிரபா நடத்தப்படுகிறது. ஸ்வயம்பிரபா தொலைக்காட்சி 34 அலைவரிசைகளை கொண்ட மத்திய அரசின் கல்வி ஒளிபரப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பாக உள்ளது.
இந்நிலையில் மதுரை மண்டலத்தில் இந்த சேவைக்கான கட்டமைப்பு அரங்கம் அமைக்கப்பட்டு இணைய தளம் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை தொடங்கியுள்ளது. இதில் முதல் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் ஒளிபரப்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழக பேராசிரியை டி.இந்திரா தமிழில் உரையாற்றினாா் என்றாா்.