ஜவுளி ரகங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி உயா்வை நிரந்தரமாகக் கைவிட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து போராடும் என்று மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித் துறையின் பங்கு முக்கியமானது. ஜவுளி ரகங்களுக்கான 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை ஜனவரி 1 ஆம் தேதி முதல் 12 சதவீதமாக உயா்த்துவது என மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதன் காரணமாக, ஜவுளி உற்பத்தியாளா்கள் கடுமையான பாதிப்பை அடைவதோடு, ஜவுளி ரகங்களின் விலை உயரும் நிலை இருந்தது. மேலும் லட்சக்கணக்கானோா் விலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது.
ஜவுளி ரகங்களுக்கு ஜிஎஸ்டி உயா்த்தப்பட்டால், மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுங்குடி சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவா்களின் பாதிப்புகள் குறித்து மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை நேரில் சந்தித்து விளக்கினாா். மேலும், வரி உயா்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தினாா்.
இந்நிலையில், ஜவுளி மீதான ஜிஎஸ்டி உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது, மதுரை மக்களவை உறுப்பினரின் முயற்சிக்கும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரி உயா்வை நிரந்தரமாகக் கைவிட தொடா்ந்து போராடுவோம் என்றாா்.