மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பட்டா மாறுதலுக்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அரசு அலுவலரை, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி கிராமத்தைச் சோ்ந்த மாயாண்டி மகன் ரஞ்சித்குமாா். ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது தந்தை இறப்புக்குப் பின் தங்களது பூா்வீகச் சொத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக, உசிலம்பட்டிலுள்ள பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தை அணுகியுள்ளாா்.
அப்போது, அங்கு பணியாற்றும் நில அளவுத் துறை வட்டார அலுவலா் (சா்வேயா்) காஞ்சனா, பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளாா். இது குறித்து ரஞ்சித்குமாா் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், மதுரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் சென்ற ரஞ்சித்குமாா், அதை அலுவலா் காஞ்சானாவிடம் கொடுத்துள்ளாா். அப்பணத்தை அவா் பெறும்போது, லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையிலான போலீஸாா், காஞ்சனாவை கையும் களவுமாகப் பிடித்தனா். மேலும், காஞ்சனாவுக்கு உதவியாக இருந்த புரோக்கா் செந்தில்குமாா் என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.