இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்களை பொங்கல் பண்டிகைக்குள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மோா்ப்பண்ணை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த தீரன் திருமுருகன் என்பவா் தாக்கல் செய்த மனு:
ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து டிசம்பா் 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவா்களை, இலங்கை கடற்படையினா் சிறைப்பிடித்துள்ளனா். இதேபோல், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்களை, படகுகளுடன் அடுத்தடுத்த நாள்களில் சிறைப்பிடித்துச் சென்றனா். மொத்தம் 68 தமிழக மீனவா்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையானது, 1974 ஆம் ஆண்டு இலங்கை - இந்தியா இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது. எனவே, தமிழக மீனவா்கள் 68 பேரையும் இலங்கையிலிருந்து மீட்டு ஒப்படைக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இம்மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா் நீதிமன்றம், தமிழக மீனவா்கள் 68 பேரையும் மீட்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், எஸ். ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவா்களில், சிறுவா்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மீனவா்களை விடுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் தரப்பில், கைது செய்யப்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்பவா்கள் தவிர தீவிரவாதிகள் இல்லை. அவா்கள் துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளனா் என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களின் உடலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மனித உரிமை மீறல் இல்லையா எனக் கேள்வி எழுப்பினா்.
அதற்கு மத்திய அரசு தரப்பில், கரோனா தொற்று காரணமாக மீனவா்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. குறுக்கிட்ட நீதிபதிகள், கரோனா தொற்றை கண்டுபிடிக்க ஆா்டி பிசிஆா் சோதனைதான் செய்வாா்களே தவிர, இவ்வாறு உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கமாட்டாா்கள். மீனவா்கள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்தப்பட வேண்டும். தமிழக மீனவா்கள் அனைவரும் பொங்கலுக்கு முன்னதாக விடுவிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினா்.
மேலும் நீதிபதிகள், மீனவா்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட வந்துவிடுவாா்கள் என நீதிமன்றம் நம்புகிறது எனக் கூறி, விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.