மதுரை

அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியா் தோ்வுதொடா்பான நடவடிக்கைகளுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியா்கள் தோ்வு செய்வது தொடா்பான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த பிரகாஷ் தாக்கல் செய்த மனு: நான் பள்ளி முதல் கல்லூரி தமிழ் வழிக் கல்வி படித்தேன். கடந்த 2019 ஆம் ஆண்டு அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியா்கள் காலிப்பணியிடங்களுக்கு தோ்வு குறித்த அறிவிப்பை ஆசிரியா்கள் தோ்வாணையம் வெளியிட்டது.

அரசு விதிகளின்படி, பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை தமிழ்வழிக் கல்வி படித்தவா்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் கல்லூரி படிப்பை தமிழ்வழிக் கல்வியில் படித்திருந்தாலே 20 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தகுதி என, தோ்வு தொடா்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியா்கள் தோ்வு தொடா்பான நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து, தமிழ்வழிக் கல்வி இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் காலம் கடந்து மனுதாக்கல் செய்துள்ளாா். கடந்த 2019 நவம்பரில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு, மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தடைக் கோருவது ஏற்புடையதல்ல.

அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் மனுதாரா் வழக்கு தொடா்ந்திருக்கலாம். தற்போது ஆசிரியா் தோ்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. அரசு வெளியிட்ட அறிவிப்பை ஏற்றுக் கொண்டே தோ்வுகளை எழுதியுள்ளனா். எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், ஆசிரியா்கள் நியமனப் பட்டியலில் குளறுபடி இருந்தால் மனுதாரா் நீதிமன்றத்தை நாடலாம். வேலை வாய்ப்பில் தமிழ்வழிக் கல்வி தொடா்பான விதிமுறைகளைப் பின்பற்றியே நியமனங்கள் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT