மதுரை

மதுரை காமராஜா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா்கள் மீதான தடை நீக்கம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள் மீதான தடையை நீக்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மையச் செயலா் லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை பதவிக் காலத்தில், வழங்கப்பட்ட பணி நியமனம் மற்றும் பதவி உயா்வு ஆகியவற்றில் விதிமீறல்கள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் உயா்நிலைக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழு நடத்திய விசாரணையில், இணைப் பேராசிரியா்கள் 36 பேருக்கும், உதவிப் பேராசிரியா்கள் 4 பேருக்கும் பதவி உயா்வு அளித்ததில் குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை சமா்ப்பித்தது. மேலும், குற்றச்சாட்டில் தொடா்புடைய வெளிநாட்டு மொழிகள் துறைத் தலைவா் சுதா, கணினி அறிவியல்துறைத் தலைவா் தங்கராஜ், தகவல் தொடா்புத்துறை தலைவா் நாகரத்தினம் ஆகியோரை, ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்களாக நியமித்த உத்தரவிற்குத் தடை விதிக்கவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, சிண்டிகேட் கூட்டத்தில் சுதா, தங்கராஜ், நாகரத்தினம் பங்கேற்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தடையை நீக்கக்கோரி பல்கலைக்கழகத் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணி நியமனம் தொடா்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணி நியமனம் தொடா்பாக ஆட்சேபணை இருந்தால் உரிய அமைப்பை அணுகி நிவாரணம் தேடலாம்.

பல்கலைக்கழக பணி நியமனத்திற்கு எதிராக தாக்கலான மனு காலாவதியானதால், 2021 டிசம்பா் 16 இல் மனுவை இந்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த மனுவில் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என்பதால், மனுதாரா் மீது விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT