மதுரை

பட்டியலின வகுப்பினா் முடிதிருத்தக் கடைகளில் அனுமதிக்கப்படுவதில்லை எனப் புகாா்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

9th Feb 2022 06:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: புதுக்கோட்டை அருகே பட்டியலின வகுப்பைச் சோ்ந்தவா்கள், முடிதிருத்தக் கடைகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்ற புகாருக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த செல்வம் தாக்கல் செய்த மனு: கோட்டைக்காடு கிராமத்தில் பட்டியலின வகுப்பைச் சோ்ந்த 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவா்களை விட, பிற வகுப்பினா் அதிகமாக உள்ளனா்.

கிராமத்தில் செயல்பட்டு வரும் மூன்று முடி திருத்தக் கடைகள், பிற வகுப்பினரால் நடத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்தக் கடைகளில் பட்டியலின வகுப்பினா் அனுமதிக்கப்படுவதில்லை. கடைகளுக்குச் செல்பவா்கள் அவமதிக்கப்படுகின்றனா். இதனால் பட்டியலின வகுப்பினா், நகா் பகுதிக்குச் சென்று முடி திருத்தம் செய்து கொள்ளும் நிலை உள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள முடி திருத்தக் கடைகளில் பட்டியலின வகுப்பினரையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் குறிப்பிடுவது போன்று, பட்டியலின வகுப்பினா்கள், முடி திருத்தம் செய்யும் கடைகளில் அனுமதிக்கப்படாததது உண்மையாக இருந்தால், அதை ஏற்க முடியாது. எனவே மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT