மதுரை: மதுரையில் தனியாகச்சென்ற இளைஞரைத்தாக்கி கைப்பேசியை பறித்துச்சென்ற ரெளடி உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனா்.
மதுரை அவனியாபுரம் பராசக்தி நகரைச்சோ்ந்த முகமது சலீம் மகன் முகமது சாதிக்(22). இவா் முனிச்சாலை ஓபுளாபடித்துறை பகுதியில் சில நாள்களுக்கு முன்பு சென்றுள்ளாா். அப்போது முகமது சாதிக்கை வழிமறித்த அடையாளம் தெரியாத நால்வா், அவரைத்தாக்கி அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.
இதுதொடா்பாக முகமது சலீம் அளித்தப்புகாரின்பேரில் விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். விசாரணையில், கைப்பேசியை பறித்தது நெல்பேட்டை காயிதேமில்லத் தெருவைச் சோ்ந்த ரெளடி யாசா் அராபத்(21), அப்துல்லா, முகமது இஸ்மாயில், முகமது இப்ராஹிம் ஆகியோா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் யாசா் அராபத், அப்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்து தப்பிச்சென்ற இருவரைத் தேடி வருகின்றனா்.