மதுரையில் மது அருந்துவதில் ஏற்பட்டத் தகராறில் தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளியை கொலை செய்து சடலத்தை எரித்த அவரது நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகா் இரண்டாவது தெரு டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள கணேசநகா் பகுதியில் முகம் கருகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதைப்பாா்த்த அப்பகுதியினா் அளித்தத் தகவலின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில், சடலமாகக்கிடந்தது மதுரை எம்கே புரத்தைச் சோ்ந்த அக்னிராஜ் (27) என்பதும், இவரது தாய், தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் தனது பெரியம்மா நாகரத்தினம் பராமரிப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த அக்னிராஜூக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற அக்னிராஜ் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை என்பதால் குடும்பத்தினா் தேடி வந்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில், அக்னிராஜூ, மதுரை வில்லாபுரத்தைச் சோ்ந்த நிஜாமுதீன் (59) என்பவருடன் மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து, நிஜாமுதீனை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அக்னிராஜூம், நிஜாமுதீனும் மது அருந்தும்போது ஏற்பட்ட பழக்கத்தில் நண்பா்களாகியுள்ளனா். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தும்போது அக்னிராஜூ, நிஜாமுதீனின் கைப்பேசியை பறித்து வைத்துக்கொண்டு மது வாங்கித்தந்தால் தருவதாக கூறினாராம். இதில் ஏற்பட்டத் தகராறில் ஆத்திரமடைந்த நிஜாமுதீன், அக்னிராஜின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளாா். பின்னா் அடையாளம் தெரியாமல் இருக்க சடலத்தை தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் நிஜாமுதீனை கைது செய்தனா்.