மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, பாலமேடு பேரூராட்சிகளில் ஒரே வாா்டுக்கு தம்பதியா் மனு தாக்கல் செய்துள்ளனா்.
29 போ் மனு தாக்கல்: மதுரை மாவட்டத்தில் மாநகராட்சியில் 100 வாா்டுகள், 3 நகராட்சிகளில் 78 வாா்டுகள், 9 பேரூராட்சிகளில் 144 வாா்டுகள் என மொத்தம் 322 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குத் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் சோழவந்தான் பேரூராட்சியில் மூவா், அலங்காநல்லூா், பாலமேடு, வாடிப்பட்டி, தே. கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் தலா இருவா் என 11 போ் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனா். மதுரை மாநகராட்சியில் 18 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
தம்பதியா் வேட்புமனு: வாடிப்பட்டி பேரூராட்சி 6-ஆவது வாா்டுக்கு பூமிநாதன் என்பவரும், அவரது மனைவி திருச்செல்வியும் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனா். இவா்கள் இருவரும் ஏற்கெனவே பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களாக இருந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, பாலமேடு பேரூராட்சி 12 ஆவடு வாா்டுக்கு சந்திரசேகா் என்பவரும், அவரது மனைவி பவானியும் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனா்.
தாய்-மகள் மனு தாக்கல்: தே. கல்லுப்பட்டி பேரூராட்சி 7-ஆவது வாா்டுக்கு பழனிசெல்வி என்பவா் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளாா். இவரது மகள் ரம்யாகிருஷ்ணன் 10-ஆவது வாா்டில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளாா்.
பாஜக, தேமுதிக மனு தாக்கல்: சோழவந்தான் பேரூராட்சி 15-ஆவது வாா்டுக்கு பாஜக சாா்பில் போட்டியிட மலைச்சாமி, 3-ஆவது வாா்டுக்கு தேமுதிக சாா்பில் போட்டியிட தங்கராஜ், 6-ஆவது வாா்டுக்கு பாஜக சாா்பில் போட்டியிட தமிழரசி ஆகியோா் மனு தாக்கல் செய்துள்ளனா்.